எனது மகள்

எத்தனை மணித்துளிகள்
காத்திருந்திருக்கிறேன்
இந்த ஒரு நிமிடத்திற்காய்

உலகம் என்னை மட்டுமே
சுற்றிக் கொண்டிருப்பதாய்
தோன்றுகிறது எனக்கு

ஒட்டு மொத்த
பறவை கூட்டமும்
என்னோடு பறப்பதாய் உணர்கிறேன்

உனது புன்னகை எல்லாம்
என் மேல் பூக்களாய் சொரிகிறது

உனது விழி அசைவில்
வீண்மீன்களாய் சிதறுகிறது
இந்த அறை முழுவதிலும்

விரல் கொண்டு
விருந்து படைக்கிறாய்
எனது முகமெங்கும்

முத்தம் தந்து
யுத்தம் செய்கிறாய்
என்னோடு

எனது நாட்களின்
எல்லா பக்கங்களிலும்
நீயே நிறைந்திருக்கிறாய்

தேவதைகள் சூழ்ந்திருக்கும்
மலர்க்கூட்டம் நீ

அத்தனை மொழிகளிலும்
அழகானவள் நீ

எனது பாலைவனத்தின்
மழைச்சாரல் நீ

இவை அனைத்திற்கும்
மேலாய் எனது மகளாய்.

காத்திருப்பு

விழிகள் பூரிக்க காத்திருந்திருக்கிறது மனம்
தினமும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து

அப்பா வாங்கி வரும் கடை உணவிற்காய்

மாலை நேரத்து விளையாட்டிற்காய்

அம்மாவோடு வாய்க்கால் செல்லும் பொழுதிற்காய்

வாடகை சைக்கிள் எடுத்து வீதி
எங்கும் சுற்றி திரிவதற்கு

காதலிக்காக கடல் அலையோடு

நண்பனுக்காய் புகைவண்டி நிலையத்தில்

சில நிமிடங்களுக்காய் மணிக்கணக்கில்

சில உறவுகளுக்காய் மாதக்கணக்கில்

ஊர் செல்லும் விடுமுறையை எண்ணி

புதிதாய் வாங்க செல்லும் ஒரு பொருளுக்காய்

தினமும் பயணிக்க வேண்டிய பேரூந்திற்காய்

திருவிழா கூட்டத்தில் தொலைத்த பெண்ணிற்காய்

எங்கோ மாற்றாலாகி சென்ற பள்ளித் தோழமை தேடி

மருத்துவமனை வாசலில் உயிர் எதிர்பார்த்து

முதல் மாத ஊதியத்திற்காய்

முதல் கவிதை வெளியிட்ட புத்தகத்திற்காய்

எங்களுக்கே உரிய சொந்த வீட்டிற்காய்

எங்கள் வீட்டு தோட்டத்தின் முதல் பழத்திற்காக

பௌர்ணமி இரவின் நிலாச் சோற்றிற்காக

இது போல இன்னும் ஆயிரமாயிரம்
காத்திருப்புகளோடே நீள்கிறது
எனது காலம்

உன்னுடனான காதல்

விடியலில் காணக்கிடைத்த வானவில் நீ

நட்சத்திர குவியலின் மினுமினுப்பு உனது விழிகளில்

அழகுத் தமிழின் அரிய கவிதை நீ

உனது மௌனம் கூறிச் செல்லும்
ஆயிரமாயிரம் சொற்கள் என்னோடு

நீ இல்லாத கனவுகளை மனது விரும்புவதில்லை

வாசல் கடந்து வரும் தென்றலாய் மனதினுள் வருகிறாய்

அதிகாலை பனியை மீறிய கதகதப்பு
கோலமிட்டுக் கொண்டே நீ பார்க்கும்
ஒரப்பார்வையில்

கோடைகாலத்து மழைத்துளியின் ஈரம்
உனது பார்வையில்

நிச்சயமாக இல்லை உன்னைப்போல்
ஒரு அகன்ற ஜீவநதி என் தாகம் தீர்க்க

பௌர்ணமி நிலவாய் பளிச்சிடுகிறாய் பகலிலும்

வெண்மேகமாய் வியாபித்திருக்கிறாய் எனது வானெங்கும்

கற்பக விருட்சமாய் வளர்ந்திருக்கிறது
உன்னுடனான எனது காதல்

பூமி சுற்றி வரும் செயற்கைகோளாய்
உனை சுற்றி வருகிறேன்

பூக்களெல்லாம் பொறாமைப்படும் நந்தவனம் நீ

என்மேல் பொழிய காத்திருக்கும் கார்மேகம் நீ

பூவுலகம் கண்டிராத பேரழகி நீ

நீ இல்லாது…

சிறகை தவற விட்ட பறவையாய் பரிதவிக்கிறது 
மனம் நீ இல்லாமல்

நீர் வற்றி விட்ட குளத்தில் உள்ள மீனாய் துடிக்கிறேன்

பொருட்காட்சியில் பெற்றோரை தவற விட்ட 
குழந்தையாய் நிற்கிறேன் இப்பொழுது

திசை மாறிய படகாய் தத்தளிக்கிறேன்

தீயை விழுங்கியது போல உணர்கிறேன்

சுவாசக்காற்று கூட நுரையீரல் சுடுகிறது

பார்வை படுகின்ற இடமெல்லாம் 
பாலைவனமாகவே தோன்றுகிறது

கரிசல் காடாய் வெடித்து இருக்கிறது மனது

முள் கொண்டு நகக்கண்களில் 
குத்தியது போல வேதனை என்னுள்

சுடப்பட்ட களிமண்ணாய் இறுக்கம் என்னுள்

அலை விட்டு சென்ற நுரையாய் கரைகளில் அலைகிறேன்

தாய் ஆடு பிரிந்த குட்டியாய் கதறுகிறேன்

கற்பனை தொலைத்த கவிஞனாய் 
குரல் தொலைத்த பாடகனாய்
விழி தொலைத்த ஒவியனாய் திணறுகிறேன்

நீ இல்லாது…

இரவுகள்

இரவுகள் இன்று வரை தினமும் புதிது புதிதாய்
ஏதோ நிகழ்த்தி கொண்டே இருக்கிறது என்மட்டில்

இரவுகள் ஒளித்து வைத்திருக்கும் சூட்சுமம்
இன்று வரை புரிவதில்லை எனக்கு

இதுவரை எத்தனையோ இரவுகள் கடந்து விட்டேன்
ஆயினும் கடந்து வந்த இரவுகளுக்கும் எனக்குமான தொடர்புகள்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது

இரவின் மௌனங்கள் மறைத்த தவறுகளுக்கெல்லாம்
மன்னிப்பு கேட்டு விழித்து கொண்டே இருக்கிறது

காதல் தொலைத்து கண்விழித்த இரவின் மிச்சம்
இன்னும் மனதின் ஒரத்தில்

மரணம் நிகழ்ந்த இரவு இன்னும் தனக்கான சோகத்தை
சேமித்து வைத்திருக்கிறது எனக்காக

திருமணம் நிகழவிருக்கும் முந்தைய இரவு
சிறிது போதையூடே நகர்கிறது இப்பொழுதும்

மருத்துவமனையில் கழிக்கும் இரவுகள்
நீண்டே இருக்கிறது எப்பொழுதும்

பேருந்து பயணத்தில் எதிர் இருக்கை பெண்
அவள் அலைபேசி திரையில் எண் தந்து சென்ற இரவு

நெடுஞ்சாலை விபத்தில் சிக்கி உறக்கம் தொலைத்த இரவு

நண்பனோடு விடியும் வரை கதைகள் பேசிய இரவு

இரவுக்காட்சி முடிந்து அறை திரும்ப மனமில்லாமல்
வீதியில் திரிந்த நகரத்தின் இரவுகள்

கடற்கரையில் மழையினூடே நனைந்து கிடந்த இரவு

மார்கழி மாத இரவின் பனியையும் மீறி
இறைவனை பாட விழித்திருக்கும் இரவு

வெற்றியை கொண்டாடிய இரவு

தோல்வியை உள்வாங்கி கொண்ட இரவு

இன்னும் தொடர்ந்திடும்
எத்தனையோ தேடல், ஆசைகள், நிராகரிப்புகள், அலைக்கழிப்புகள்
அனைத்திற்கும் ஒரு வடிகாலாய் இரவு

எல்லாமுமாக நீ

கட்டவிழ்ந்த காளையாய்
சிலிர்த்து போகிறது மனது

கடல் தாண்டும் பறவையாய்
பறக்கிறது உன் நினைவுகள்
ஒய்வில்லாமல்

கரைவரும் அலை போல
குதித்தோடுகின்றன கால்கள்

தோட்டத்து பூக்களோடு
உரையாடிக் கொண்டே இருக்கிறேன்

கோடைகால மேகமாய் பொழிகிறது
உனது விழிகள் என் மேல்

நீ பேசும் வார்த்தைகள் அனைத்தும்
வாசம் தடவி வீசுகிறாய்

நிலவு தொடர்ந்து வருகிறேன்
உனை பின்தொடரும் பொழுது

கட்டியணைத்து கொள்கிறேன் காதலை
இரவு வேளைகளில்

நீ முத்தமிட்டு சென்ற குழந்தையின் கன்னங்கள்
தேடுகின்றன எனது இதழ்கள்

மார்கழி மாத இரவின் நடுக்கம் மனதில்
உனது விழிகளை நேரில் காணும் பொழுது

பெருக்கெடுத்து வரும் நதியாய்
இழுத்து செல்கிறாய் என்னை உன்னோடு

பூக்கள் வாசிக்க துடிக்கும் கவிதை
பட்டாம் பூச்சிகள் வட்டமிடும் நூலகம்
காற்றில் மிதந்து வரும் அழகிய பாடல்
ஒட்டுமொத்த ஒவியங்களின் வண்ணக்கலவை
எட்டி இழுக்க தோன்றும் வானவில்
கட்டி இழுக்க தோன்றும் பௌர்ணமி நிலவு
இப்படி எல்லாமுமாக நீ என்னோடு..

வாழ்க்கை

வாய்ப்புகள் வந்து கொண்டே இருப்பதால் 
தினமும் கூடிக்கொண்டே போகிறது 
எனது தவறுகள்

ஆனால் எனது தவறுகளின் பாதிப்புகள் 
எனக்கு மட்டுமே

தினம் ஒருவரை தீர்மானிக்கிறது மனம் 
இவர் நம்பகமானவர் என்று

ஆனால் மறுதினமே கிழித்தெறிகிறார்கள் மனதை

விரைவாய் பேருந்து கடந்து செல்லும்
சாலையோர மரமாய் நான்

எத்தனை பேருந்துகள் கடந்தாலும் 
நான் மட்டும் அங்கேயே

அடை மழையின் ஈரமும்
அனல் வெயிலின் வெப்பமும்
தாங்கும் மரமாகவே வாழ்க்கை

பூங்கா

திரும்பிய திசையெங்கும் இளமை கூட்டம்
காதலர்கள் பிரித்தார்களா இல்லை
காதலர்களுக்காக பிரிக்கப்பட்டதா என்று தெரியவில்லை
இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருக்கைகள்

காற்றுபுகமுடியாத இருக்கத்தில் காதலர்கள்
இவர்களை கட்டி அணைத்து செல்கிறது தென்றல்

குதித்தோடி கொண்டிருக்கிறது குழந்தைகள் ஒருபுறம்

அரசியல் தொடங்கி அமெரிக்கா வரை அலசுகிறது
ஒய்வூதிய கூட்டம் நடைபயிற்சியின் நடுவிலே

அடுத்தவன் செயலை ஆராய்வதற்கு முகாமிட்டவர்கள் சிலர்

இதன் நடுவே கொண்டு வந்த சுண்டலையோ, முறுக்கினையோ
விற்று விட துடிக்கும் சிறுவன்

இப்படி அனைவரின் கால்தடங்களையும்
செயல்களையும் உள்வாங்கிக் கொண்டு
அழகான அமைதியோடே இருக்கிறது பூங்கா.. 

காதலின் உச்சம்

என்னவன் விழி பார்த்து

இனியவன் முகம் நோக்கி

பொன்னுடல் மேனி தொட்டு

பூவுடல் ஆரத்தழுவி

மார்பதனில் முகம் புதைத்து

கரம் இரண்டால் தலை கோதி

இடைகச்சை நழுவவிட்டு

இமை இரண்டும் இறுக மூடி

இதழதனை இழந்து விட்டு

கால்விரலில் கோலமிட்டு

இளமைதனை எரியவிட்டு

சுவாசமதில் சூடு எற்றி

வியர்வையில் உடல் குளித்து

வினாடியில் உலகம் மறந்து

உனை என்னில் புதைய விட்டு

உயிரெழுத்து மெய்யெழுத்து
மீண்டும் பயின்று

இலக்கணம் எல்லாம் தலைகீழாய் தொட்டு

உடல் நழுவி தரை விழுந்து

காதலின் உச்சம் கண்டு களித்தேன்
கண்ணீர் பொங்க…

உனது வருகையால்

ஆளில்லா சாலையில் அர்த்தமில்லா அரட்டையோடு
நாம் கடந்த பொழுதுகளில்
நான் கண்ட பூங்காவனம் நீ

எனது இரவுநேர கனவு
தொழிற்சாலையின் உற்பத்தியில்
நான் தேடும் வெள்ளிநிலவு நீ

என் காலைநேர
பூஜைகளின் நடுவிலே
நான் தேடும் கடவுள் நீ

நீ எங்கு சென்றாலும் என் எண்ணங்கள்
உனை பின்தொடர்ந்தே வருகின்றன

உன் குரல் கேட்கும் பொழுதெல்லாம்
மழைச்சாரல் தூவுகிறது மனதில்

நீ இருப்பதாலே உன் தெருவெங்கும்
ரோஜாக்களின் வாசம்

அலை அடித்த வெண்மையாய் உனது புன்னகை

உனது மூச்சுக் காற்றின் வெட்பத்தை
எனது காதுமடல்களில் உணர்ந்து கொண்டே இருக்கிறேன்

நீ சிலிர்க்கும் நேரமெல்லாம் கட்டவிழ்ந்த காளையாய்
உனது அழகு எனை புரட்டி எடுக்கிறது

எனது தலையனை தேடிக்கொண்டிருக்கிறது உன்னை
விரைவில் என்னிடமிருந்து விடுபட

எனது படுக்கையறைக்கு பெண் வாசம்
சுமந்து வரப்போகும் வண்ணத்துபூச்சி நீ

உன் பெண் வாசம் உரசி பற்றிக்கொண்டது எனது இளமை
மீண்டும் நம் இதழ் இணைத்து
அணைத்து செல் அதனை

என் மனதென்னும் ஓடுபாதையில்
தடதடத்துச் செல்லும் விமானம் நீ

விருப்பமில்லாமலே வீடு செல்கிறேன்
உனை விட்டு செல்கையில்

ஆகாயம் வரை தூக்கி செல்கிறாய்
இறக்கை இன்றி உன் நினைவுகளால்

அடைமழை வீதிகளில் குடையின்றியே பயணிக்கிறேன்
உன் காதலால்

அனல்வெயில் வேளைகளில்
நனைந்து கொண்டே செல்கிறேன்
உன் பார்வையால்

எனது நாட்கள் நிறம் மாறிப்போனது
உனது வருகையால்….